காவிரி மேலாண்மை வாரியம் : ஏப்.3-ல் விமானம், ரயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி விமானம் மற்றும் ரயில் மறியல் நடத்த இருப்பதாக விவசாய அமைப்புகள் சார்பில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. இது தொடர்பாக
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள், விவசாயிகள், பல்வேறு கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 3-ந் தேதி மாநிலம் தழுவிய ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம். இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.

தமிழக அரசு பஸ்களை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் செயல்படக் கூடாது.
தமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

தஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அய்யாக்கண்ணு தலைமை தாங்குகிறார். திருவாரூரில் நடைபெறும் போராட்டத்தில் மன்னார்குடி ரெங்கநாதன் பங்கேற்கிறார். நாகையில் நடக்கும் போராட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

×Close
×Close