காவிரி மேலாண்மை வாரியம் : செவ்வாய்கிழமை முழு அடைப்பு ஓ.கே.! 5-ம் தேதியும் நடக்குமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக கூட்டணி அறிவித்த முழு அடைப்பு ஏப்ரல் 5-ம் தேதி நடக்குமா வணிகர்கள் ஆதரவு கிடைக்குமா? ஸ்டாலின் திட்டம்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக கூட்டணி அறிவித்த முழு அடைப்பு ஏப்ரல் 5-ம் தேதி நடக்குமா வணிகர்கள் ஆதரவு கிடைக்குமா? ஸ்டாலின் திட்டம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கிறது. ஆளும் கட்சியான அதிமுக தனியாக ஒரு உண்ணாவிரதம், திமுக தனது தோழமைக் கட்சிகளை திரட்டி ஒரு முழு அடைப்பு போராட்ட அறிவிப்பு, பாமக சார்பில் சில விவசாய அமைப்புகளை திரட்டி தனியாக ஒரு பந்த் அறிவிப்பு, இதற்கிடையே வணிகர் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தனித்தனி அறிவிப்புகள் என தலை சுற்றிப் போயிருக்கிறது.

காவிரி பிரச்னை தமிழ்நாட்டின் உயிர் பிரச்னை என்பதால், அது தொடர்பான அத்தனை கிளர்ச்சிகளும் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் விருப்பம்! ஆனால் அனைத்து தரப்பும் ஒன்றிணையாமல் நடத்தும் போராட்டங்கள் வீரியம் குறைந்து போகும் ஆபத்தும் உண்டு.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது மாநில அரசு! உச்ச நீதிமன்றக் கெடு முடிந்த மார்ச் 29-க்கு பிறகும் அதேபோல ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும் முடிவிலேயே மாநில அரசு இருந்தது. ஆனால் கடந்த முறை கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கே பலன் இல்லாததால் இந்த முறை திமுக தனியாக போராட்ட வியூகம் வகுத்தது.

காவிரி பிரச்னை என்பது அதிமுக.வுக்கு கவுரவப் பிரச்னை! எனவே திமுக.வின் திட்டத்தை புரிந்துகொண்டு அவசரமாக ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரத அறிவிப்பை இபிஎஸ்-ஓபிஎஸ் வெளியிட்டனர். அதன்பிறகே ஏப்ரல் 3-ம் தேதி அனைத்து விவசாய அமைப்புகளும் ஏப்ரல் 3-ம் தேதி மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்துவது இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு தெரிய வந்தது. உடனடியாக தங்கள் போராட்டத்தையும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு (செவ்வாய்கிழமை) தள்ளி வைத்தது அதிமுக.

தமிழ்நாட்டில் முழு அடைப்பு வெற்றிபெற வேண்டுமென்றால் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பும், த.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கப் பேரவையும் ஆதரித்தால்தான் உண்டு. விவசாயிகள் போராட்டம் நடத்தும் அதே நாளில் (செவ்வாய்கிழமை) கடை அடைப்பு போராட்டத்தை விக்கிரமராஜா அறிவித்தார். செவ்வாய்கிழமை ஏற்கனவே பல கடைகளை அடைக்கும் நடைமுறை இருப்பதால் அன்று கடை அடைப்பு நடத்துவது வணிகர்களுக்கு வசதியும்கூட!

தமிழ்நாட்டின் மற்றொரு பெரிய வணிகர் சங்கத்தின் தலைவரான வெள்ளையன், பிரதமர் மோடி சென்னைக்கு வருகிற ஏப்ரல் 11-ம் தேதி கடையடைப்பு என அறிவித்திருந்தார். பாட்டாளி மக்கள் கட்சியும் தந்திரமாக அதே நாளை கடை அடைப்புக்கு தேர்வு செய்தது. வெள்ளையன் சார்ந்த வணிகர் சங்கப் பேரவை, ஏப்ரல் 3-ம் தேதி கடை அடைப்புக்கும் ஆதரவு கொடுத்திருக்கிறது. எனவே ஏப்ரல் 3-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) முழு அளவில் கடை அடைப்பு உறுதி ஆகியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் திமுக தனது தோழமைக் கட்சிகளை அழைத்து ஆலோசித்தது. வழக்கமாக அழைக்கப்படும் ‘ஒரு சீட்’ கட்சிகளை தவிர்த்துவிட்டு, இடதுசாரிகள், சிறுத்தைகள், ம.தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக மற்றும் தி.க. ஆகிய கட்சிகளை மட்டும் அழைத்தார் ஸ்டாலின்.

ஏற்கனவே இரு வணிகர் அமைப்புகளும் கடையடைப்பு அறிவித்திருக்கும் ஏப்ரல் 3-ம் தேதியையே போராட்டத்திற்கு ஸ்டாலின் தேர்வு செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்டாலின் ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு என அறிவித்தார். ‘தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக ஏப்ரல் 3-ம் தேதி அறிவித்த கடையடைப்பு போராட்டத்தை வணிகர்கள் ஏப்ரல் 5-க்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக விக்கிரமராஜாவிடம் பேசுவேன்’ என்றார் ஸ்டாலின்.

விக்கிரமராஜா, பெரும்பாலும் திமுக அனுதாபி! அவரது மகன் பிரபாகர்ராஜா, திமுக இளைஞரணி பொறுப்பில் இருக்கிறார். எனவே இதற்கு முன்பு ஓரிரு முறை ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தனது அமைப்பின் போராட்டத் தேதியை அவர் மாற்றியிருக்கிறார். ஆனால் சமீப காலமாக விக்கிரமராஜா தரப்பு கோரிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கனிவாக கவனிக்கிறார்.

முதல்வர் எடப்பாடியே தான் அறிவித்த 2-ம் தேதி அறிவித்த உண்ணாவிரதத்தை மாற்றி 3-ம் தேதிக்கு அறிவித்துவிட்டார். இந்தச் சூழலில் இனி விக்கிரமராஜா 3-ம் தேதி உண்ணாவிரதத்தை 5-ம் தேதிக்கு மாற்றினால், ஆளும் கட்சியிடம் மட்டுமல்ல, அமைப்பு நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்ப்பு சம்பாதிக்க வேண்டியிருக்கும். எனவே திட்டமிட்டபடி 3-ம் தேதி கடையடைப்பு நடைபெறும் என விக்கிரமராஜா சார்ந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பெயரில் அறிக்கை வந்தது.

விக்கிரமராஜாவின் இந்த திடீர் பிடிவாதம், திமுக முகாமை அதிர வைத்தது. வெள்ளையனைப் பொறுத்தவரை, அவர் எப்போதுமே திமுக.வுடன் இணங்குகிறவர் இல்லை. இப்போது விக்கிரமராஜாவும் கைவிட்டால், கடையடைப்பு என்னாகும்? என்கிற கவலை ஸ்டாலினையும் ஆட்கொண்டது. விளைவு? ஏப்ரல் 2-ம் தேதி விக்கிரமராஜாவை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசினார் ஸ்டாலின்.

அப்போதும், ‘போராட்டத் தேதியை இனி மாற்றுவது சாத்தியமல்ல. 5-ம் தேதியும் கடையடைப்பு நடத்த முடியுமா என பார்க்கிறோம்’ என சமாதானம் கூறிவிட்டு வந்திருக்கிறார் விக்கிரமராஜா. ஆனால் ஒரு நாள் இடைவெளியில் இரு முறை கடையடைப்பு நடத்துவது சாத்தியமல்ல என்கிற குரல் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மத்தியில் ஒலிக்கிறது. எனவே ஏப்ரல் 5-ம் தேதி அறிவித்த கடையடைப்பை எப்படி வெற்றிகரமாக மாற்றுவது? என கைபிசைந்து நிற்கிறது திமுக.

முதலில், ‘மாணவர்கள் வசதிக்காக 3-ம் தேதி கடையடைப்பை வணிகர்கள் கைவிட வேண்டும்’ என கூறிய திமுக, இப்போது ‘3-ம் தேதி போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். 5-ம் தேதி போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்’ என வேண்டுகோள் வைத்திருக்கிறது. திருநாவுக்கரசர் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் சிலர், ‘3-ம் தேதி போராட்டம் நடத்தலாம்’ என சுட்டிக்காட்டியும் அதை கேட்காமல் திமுக தரப்பு இப்படி எசகுபிசகாக போராட்டத் தேதி அறிவித்ததாக கூறுகிறார்கள்.

‘நேற்று கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் விவசாய அமைப்புகளுடன் கரம் கோர்க்கும் வகையில் 3-ம் தேதி திருச்சி விமான நிலைய முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்திருக்கிறார். ஆளும்கட்சியே தனது போராட்டத் தேதியை மாற்றிக் கொண்டது. எங்க தளபதி இப்படி தனியா அறிவிச்சுட்டு தத்தளிக்கிறாரே..!’ என உடன்பிறப்புகளே அங்கலாய்க்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close