ஐபிஎல் போட்டியின்போது சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாக காவிரி உரிமைக்குழு சார்பில் தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.
ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக இந்தப் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது. பெ.மணியரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கம் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் திங்கட்கிழமை கலந்து பேசி போராட்டத்தை அறிவித்தனர்.
தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக்கொண்டிருக்கும்போது தமிழகத்தின் தலைநகரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவமதிக்கிறக் கொடுஞ்செயலாகும். ஆகவே, அதனைத் தடுத்து நிறுத்தித் தமிழர்களின் உணர்வினையும், உள்ளக்குமுறலையும் உலகுக்குத் தெரிவித்திட முனைவது வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
ஆகவே, ஏப்ரல் 10 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டியினை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், தமிழர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு எட்டும்வரை ஐ.பி.எல்.போட்டிகளை வேறு மாநிலத்தில் நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். நிர்வாகத்தினைக் கேட்டுக்கொள்கிறோம்.. இதற்குத் தமிழக அரசானது உரிய அழுத்தம் கொடுத்து அப்போட்டிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்றும்.
நாங்கள் எந்த விளையாட்டுக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும், உணர்வெழுச்சியினையும் துளியும் பொருட்படுத்தாது ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்திட முற்பட்டால் அதற்குப் பிறகு மைதானத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவர்களே பொருட்பேற்க நேரிடும் என்றும், போட்டி நடக்கவிருக்கிற அன்றே மிகப்பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் நாட்டுக் கொடியுடன் போராடுவோம்; கட்சிக்கொடிகள் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து நடத்தும் முனைப்பில் ஐபிஎல் நிர்வாகத்தினர் உள்ளனர். இந்நிலையில் தமிழக மக்களின் உணர்வலைகளை உலகறியச் செய்யும்விதமாக, பெ.மணியரசன் தலைமையில் 10-04-2018 (செவ்வாய்க்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணித்து மாலை 6 மணிக்கு மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.