காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லி சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரம், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து மத்திய அரசு மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில அம்சங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு தொடுத்த மனு, இதில் நடவடிக்கை எடுக்க 3 மாதங்கள் அவகாசம் கேட்டு மத்திய அரசு வைத்துள்ள கோரிக்கை ஆகியவை குறித்து ஏப்ரல் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
காவிரி போராட்டங்கள் தமிழ்நாட்டில் வலுத்துள்ள நிலையில் டெல்லியில் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு முன்வைக்கும் வாதங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. இதில் தமிழ்நாடு அரசின் வாதங்களை வலுவாக வைப்பது குறித்து ஆலோசிக்க காவிரி வழக்கில் தமிழ்நாடு சார்பில் வாதாடும் டெல்லி மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ஜி.உமாபதி உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் சென்னை வந்திருக்கிறார்கள்.
காவிரி வழக்கு குறித்து இன்று (ஏப்ரல் 7) கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டெல்லி சட்ட நிபுணர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது காவிரி வழக்கு குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் அடிப்படையில் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை மூத்த வழக்கறிஞர்கள் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.