காவிரி பிரச்னை குறித்து நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி பிரச்னை குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

காவிரி பிரச்னை குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக சார்பில் நேற்று (3-ம் தேதி) தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடையடைப்பும், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டங்களும் நேற்று நடந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏப்ரல் 5-ம் தேதி (நாளை) திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. முழு அடைப்பை நடத்திய உடன் அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது குறித்து திட்டமிட நாளை (5-ம் தேதி) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி மீட்பு பயணம் மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸும் மத்திய அரசை தட்டிக் கேட்கும் தகுதியில் இல்லை.

தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல நடிக்கும் இபிஎஸ், ஓபிஎஸ்.ஸை எழுப்ப முடியாது’ என்றார் ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து ஸ்டாலின் வாகனப் பயணம் செல்லும் வகையில் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

×Close
×Close