சுப்ரிம் கோர்ட் உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்றுடன் கெடு முடிகிறது. ஆனால் மத்திய அரசு அது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த பரபரப்பான சூழலில் திமுக செயற்குழு நாளை சென்னையில் கூடுகிறது.
காவிரி நதி நீர் தொடர்பான தீர்ப்பை, சுப்ரிம் கோர்ட் பிப்ரவரி 16ம் தேதி வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை 6 வார காலத்துக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தது.
சுப்ரிம் கோர்ட் விதித்த கெடு, இன்றுடன் முடிகிறது. ஆனால் இதுவரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.
பிரதான எதிர்கட்சியான திமுக, காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க நாளை(30.3.18) செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டம் நடக்கிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழுவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்து ஸ்டாலின் வீட்டில் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தை குலுங்க வைக்கக் கூடிய வகையில் போராட்டத்தை அறிவிக்க திமுக தயாராகி வருகிறது. திமுக அறிவிக்கும் போராட்டத்தில் கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ள அழைக்கலாமா? வேண்டாமா என்பது குறித்தும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் விவாதித்து வருகிறார்.