காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை என கோவையில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டும் 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 5 நாட்களாக அவை முடங்கும் அளவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுவிக்க சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும். சிறையில் இருப்பவர்களை சட்டத்துக்கு புறம்பாக விடுதலை செய்ய முடியாது. சட்ட வழிமுறைகள் இருந்தால் ஆய்வு செய்து விடுதலை செய்ய வழி வகை செய்யப்படும். அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் சொல்ல முடியாது. சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்வோம்.
காவிரி பிரச்சினையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. மத்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படவேண்டும் என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி மத்திய அரசு 6 வார காலத்துக்குள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நேற்று முன்தினம் கூட மத்திய அரசு 4 மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதில் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறி உள்ளோம்.
உச்ச நீதி மன்றம் 6 வார காலத்திற்குள் இதனை அமைக்க வேண்டும் என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழகத்தின் தலைமை செயலாளர் தெளிவாக நமது நிலைப்பாட்டை கூறி உள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் சார்பில் 13 நாட்கள் வாதாடி உள்ளோம். நிறைய பாயிண்டுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பும் வந்து விட்டது. அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டுவது சரியல்ல.
காவிரி மேலான்மை வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கேட்கிறீர்கள். எம்.பி.க்கள் தொடர்ந்து பேரவையில் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கே இன்னும் தீர்வு கிடைக்க வில்லை. அரசியல் காரணங்களுக்காக குற்றம்சாட்டுவது சரியல்ல. இவ்வாறு முதல்வர் பேட்டியளித்தார்.