காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், கர்நாடகம் சார்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலர் ராகேஷ்சிங், கேரளா தரப்பில் அம்மாநில நீர்வளத்துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி சார்பில் பொதுப்பணித்துறை ஆணையர் அன்பரசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் என்பதால், இந்தக் கூட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆணைய கூட்டம் இன்று கூடும் நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நேற்று முன்தினம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவது தொடர்பாக வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.