காவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் : மு.க.ஸ்டாலின் பேட்டி

காவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் என சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காவிரி போராட்டத்தில் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் என சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காவிரி போராட்டம், தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் திருச்சி முக்கொம்பில் இன்று மாலை காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள திமுக செயல்தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.கஸ்டாலின் இன்று காலையில் திருச்சிக்கு புறப்பட்டார்.

காவிரி போராட்டங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது.. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய முழு கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்.

இன்று திருச்சியில் துவங்கும் காவிரி உரிமை மீட்பு பயணம் ஏப்ரல் 13-ல் கடலூரில் முடிவடையும். அங்கு பொதுகூட்டம் நடத்தப்படும். பிறகு அங்கிருந்து சென்னை வந்து, ஆளுநரை சந்திப்போம். நடைபயணம் முடிந்த பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளும் மீண்டும் கூடி ஆலோசிப்போம்.
காவிரிக்காக நடைபெறும் மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்; இரு குழுக்களாக பயணத்தை தொடர்கிறோம். பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை. அதனால் அவர் தமிழகம் வரும் போது கருப்புக் கொடியுடன் சென்று அவரை சந்திக்க உள்ளோம்.
காவிரிக்காக என் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்றுக்கொள்ள தயார். காவிரி பிரச்னையில் எங்களுக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் அதைப்பற்றி கவலையில்லை’ இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close