அதிமுக எம்.பி.க்களின் அடடே ஸ்டன்ட்!

காவிரி பிரச்னையில் அதிமுக எம்.பி.க்களின் ஸ்டன்ட், முகம் சுழிக்க வைக்கிறது. இதில் லேட்டஸ்ட் நபர், முத்துக்கருப்பன். அடுத்த வாரம் இவர் ராஜினாமா செய்வாராம்.

காவிரி பிரச்னையில் அதிமுக எம்.பி.க்களின் ஸ்டன்ட், முகம் சுழிக்க வைக்கிறது. இதில் லேட்டஸ்ட் நபர், முத்துக்கருப்பன். அடுத்த வாரம் இவர் ராஜினாமா செய்வாராம். ஆனால் தலைமை கேட்டுக்கொண்டால் பதவியில் தொடர்வாராம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி, கடந்த இரு வாரங்களாக அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கினர். தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். தமிழ்நாட்டுப் பிரச்னை ஒன்றுக்காக தொடர்ந்து இத்தனை நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது இதுதான் முதல் முறை!

காவிரி மேலாண்மை வாரியத்திற்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில்தான், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ‘ஆந்திரா பிரச்னையைவிட எங்கள் காவிரி பிரச்னை முக்கியம். எனவே எங்கள் பிரச்னைக்கு நீங்கள் ஆதரவு கொடுங்கள். அதன்பிறகு உங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பார்க்கலாம்’ என தம்பிதுரை கூறியதில் ‘லாஜிக்’ இருந்தது.

காவிரி பிரச்னையில் முந்தைய ஐ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில் திமுக.வும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. எனவே அதிமுக இந்த அளவுக்கு போராடியதே பாராட்டத்தக்க அம்சமாக இருந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக காவிரி பிரச்னையை காமெடி ட்ராக்கில் அதிமுக எம்.பி.க்கள் சிலரே இழுத்துச் செல்வதுதான் புதிய அபாயம்!

காவிரி பிரச்னை குறித்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், மொத்த அதிமுக எம்.பி.க்களும் தற்கொலை செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்றார். அடுத்து அரி, நாகராஜ் உள்ளிட்ட எம்.பி.க்கள், ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கூறினர்.

காவிரி நாடகத்தின் அடுத்த கட்டமாக இன்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினரான திருநெல்வேலி முத்துக்கருப்பன், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வளவோ குரல் கொடுத்தோம். எங்கள் கோரிக்கையை மோடியும் அமித்ஷாவும் ஏற்கவில்லை. மக்களுக்கு பயன்படாத இந்த எம்.பி. பதவி எதற்கு? எனவே பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டேன். ஜெயலலிதா தந்த பதவியை காவிரி பிரச்னைக்காக ராஜினாமா செய்வது மகிழ்ச்சிதான்’ என கூறிய முத்துக்கருப்பன், இதுவரை சீரியஸாக பேசியது போலவே தெரிந்தது.

ஆனால் கடைசியில், ‘எனது ராஜினாமா கடிதத்தை அடுத்த வாரம் ராஜ்யசபை தலைவரிடம் வழங்குவேன். கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால், ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவேன்’ என்றாரே பார்க்கலாம்! ஆக, ‘எனது ராஜினாமா அறிவிப்பு வெறும் நாடகம்’ என அவரே அவரது வாயால் கூறுவது போல அமைந்தது அந்தப் பேட்டி! இந்தப் பேட்டியை டெல்லியில் கொடுத்து பரபரப்பூட்டியது இன்னும் கொடுமை!

காவிரி, தமிழக மக்களுக்கு வாழ்க்கை! மக்கள் பிரதிநிதிகளுக்கு விளையாட்டு!

 

×Close
×Close