/tamil-ie/media/media_files/uploads/2018/04/nadigar-sangam..jpg)
Cauvery Management Board, Nadigar Sangam to Protest
காவிரி-ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக மொத்த தமிழ்நாடும் போராடிக் கொண்டிருக்க, 4-ம் தேதி வேறு பிரச்னைக்காக போராட்டம் நடத்துகிறது சினிமா உலகம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன. இந்த தருணத்தில் ‘கியூப்’ கட்டண உயர்வு பிரச்னைக்காக ஏப்ரல் 4-ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்த இருப்பதாக தமிழ் திரையுலகினர் அறிவித்துள்ளனர்.
காவிரி பிரச்னைக்காக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட ஆரம்பித்திருக்கும் நிலையில், சினிமா உலகினரின் பேரணி அதை திசை திருப்பிவிடும் அபாயம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து காவிரி-ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காகவும் நடிகர் சங்கம் போராட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் இந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகிய 3 பேரும் நேற்று மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் இப்போது 2 விதமான போராட்டங்கள் நடைபெறுகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி நம் உரிமை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகிறார்கள்.
இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 25 வருடங்களாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தூத்துக்குடி மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. பொதுவான பிரச்சினை. இந்த 2 பிரச்சினைகளுக்காகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
அது உண்ணாவிரத போராட்டமா? அல்லது வேறு மாதிரியான போராட்டமா? என்பதை ஓரிரு நாளில் அறிவிப்போம். நடிகர்-நடிகைகளின் போராட்டம் சென்னையில் நடைபெறும்.
இதுபோன்ற சமூக பிரச்சினைகளுக்காக ஒரு ஆவணப்படம் தயாரிப்பது பற்றியும், நடிகர் சங்கம் ஆலோசிக்கும்.
தமிழ் திரைப்படத்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. டிஜிட்டல் கட்டணத்தை குறைக்கக்கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள். டிஜிட்டல் கட்டணத்தை குறைக்கக்கோரி வருகிற 4-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்துக்கு நடிகர் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும்.
தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடிகர் சங்கம் பல முயற்சிகளை செய்துவருகிறது. நடிகர் சங்கம் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபடும். மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.