தமிழகத்திற்கு நவம்பர் 23-ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 2600 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.
இந்த ஆண்டு மழை குறைவாக பெய்துள்ளதாகவும் அதனால், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது.
அண்மையில், காவிரி ஒழுங்காற்று குழு கூடி தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 23-ந் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட பரிந்துரைத்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடி ஆலோசனை நடத்தியது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 11 டி.எம்.சி நீரை நவம்பர் 23-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“