காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு முடிந்த நிலையில், மத்திய அரசு இதில் மவுனம் கலைக்கவில்லை. என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு?
காவிரி மேலாண்மை வாரியம், மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரி பிரச்னையில் ஓரளவு நியாயம் பெற்றுத் தரும் அம்சமாக இருக்க முடியும். காரணம், காவிரி பாசன அணைகள் கர்நாடகாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் கர்நாடகா தண்ணீர் திறக்கப்போவதில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால், அது இரு மாநிலங்களையும் சாராத நீர்வளத்துறை நிபுணர் ஒருவரின் தலைமையில் சுயேட்சையான அமைப்பாக இயங்கும். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 பாசன மாநிலங்களில் பிரதிநிதிகள் அதில் இடம் பெற்றிருப்பார்கள். நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்க அது வழிவகை செய்யும்.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழகத்திற்கான நீர் அளவை 14 டி.எம்.சி. குறைத்து (நடுவர் மன்ற இறுதி உத்தரவில் கூறப்பட்டதைவிட) உத்தரவிட்டது. ஆனாலும் 6 வார காலத்தில் நடுவர் மன்ற உத்தரவின் இதர அம்சங்களை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழக விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று தமிழ்நாடு நம்பியது. ஆனால் உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கெடு நேற்றுடன் (மார்ச் 29) முடிந்தது. இந்த 6 வார காலத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுவை ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களை அழைத்து மத்திய நீர்வளத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமே மத்திய அரசின் செயல்பாடாக இருந்தது. அதைத் தாண்டி, உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் என்கிற வார்த்தையே உச்ச நீதிமன்ற உத்தரவில் இல்லை என்கிற வாதத்தை கர்நாடகமும், மத்திய நீர்வளத்துறையும் முன்வைத்து வருகின்றன. நடுவர் மன்ற இறுதி உத்தரவில் நீரின் அளவை குறைத்தது தவிர வேறு எந்த மாற்றத்தையும் உச்ச நீதிமன்றம் செய்யவில்லை என்பது தமிழ்நாடு வாதம்!
‘காவிரி நீர் பங்கீடுக்காக, ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை உருவாக்கவே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே அது தொடர்பாக பேசி முடிவெடுப்போம்’ என்கிறது கர்நாடகம்! ஆனால் தமிழ்நாடு தரப்போ, ‘காவிரி பிரச்னையில் பேச்சுவார்த்தை என்பதே காலம் கடத்தும் தந்திரம்தான். உச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டது, காவிரி நடுவர் மன்றம் உத்தரவு அடிப்படையிலான காவிரி மேலாண்மை வாரியம்தான்’ என்கிறது.
காவிரி பிரச்னை இரு மாநிலங்களிலும் கொளுந்துவிட்டு எரிந்தபோதும், 6 வாரங்கள் அமைதியாக கழித்த மத்திய அரசு கெடு முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாக கூறுகிறது. அதாவது, ‘ஸ்கீம் என குறிப்பிட்டிருப்பது எதை?’ எனக் கேட்டு இப்போது மனு தாக்கல் செய்ய இருக்கிறார்களாம். இந்த மனுவை உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிப்ரவரி 16-ம் தேதிக்கு மறுதினமே தாக்கல் செய்திருக்க முடியும். ஆனாலும் மே 12-ல் நடைபெற இருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல், மத்தியில் ஆளும் பாஜக.வுக்கு ரொம்ப முக்கியம்! அதனால் முடிந்த அளவுக்கு கர்நாடகாவுடன் இணைந்து இழுத்தடிப்பதுதான் அதன் நோக்கம்!
தமிழ்நாடு அரசு பல பிரச்னைகளில் மத்திய அரசுக்கு தலையாட்டி வந்தாலும்கூட, காவிரி பிரச்னையில் சற்றேனும் சீற விரும்புகிறது. காரணம், ஜெயலலிதா இதில் ஒருபோதும் சமரசம் செய்ததில்லை என பெயர் எடுத்து வைத்திருக்கிறார். தவிர, வரலாறு முழுக்க காவிரி துரோகங்கள் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால்தான் வேறு எந்தப் பிரச்னைக்கும் துடிக்காத அதிமுக எம்.பி.க்கள் காவிரிக்காக இரு வாரங்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். கட்சித் தலைமை உத்தரவிட்டால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசித்தது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை 6 வாரத்தில் அமல்படுத்தாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனினும் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு இந்த முடிவுக்கு வந்திருப்பதை மத்திய அரசும் உணர்ந்துவிட்டது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளில் இருந்து நழுவும் விதமாக, தீர்ப்பில் விளக்கம் கேட்டு ஒரு மனுவை அதே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது. காவிரிப் பிரச்னைக்காக கர்நாடகாவுடன் வழக்கு நடத்திய காலம் போய், மத்திய அரசுடனும் வழக்கு நடத்த வேண்டிய துரதிருஷ்டம் தமிழ்நாட்டுக்கு!
காவிரி பிரச்னையில் திமுக சார்பில் என்ன விதமான போராட்டம் என்பதை இன்று (மார்ச் 30) செயற்குழுவில் முடிவு செய்கிறார்கள். வழக்கம்போல பந்த், கடையடைப்பு, மனித சங்கிலி என கிளம்புவார்களா? அல்லது, டெல்லியில் விவசாயிகளை திரட்டி போராடப் போகிறார்களா? என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நடத்தும் போராட்டங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்! மக்களின் ஒருமித்த குரல்களுக்கு நீதிமன்றங்கள் செவிசாய்த்த நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். அதற்கு உதாரணம், ஜல்லிகட்டு! தவிர, சட்ட ரீதியாக தமிழ்நாடு அரசு எடுக்கவிருக்கும் நிலைப்பாடு, தமிழ்நாடு அரசு முன்வைக்க இருக்கும் வாதங்கள் ஆகியவைதான் காவிரியில் தமிழ்நாடு தனது உரிமையை பெறுவதற்கான மிச்சமிருக்கும் வழி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.