காவிரி பிரச்னை : கோவையில் திமுக நிர்வாகிகள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

காவிரி பிரச்னை தமிழ்நாட்டில் கொதிநிலையை எட்டியிருக்கிறது. போராட்டங்கள் பல முனைகளிலும் வெடித்துக் கிளம்புகின்றன. தீர்வு கிடைக்குமா?

காவிரி பிரச்னை தமிழ்நாட்டில் கொதிநிலையை எட்டியிருக்கிறது. போராட்டங்கள் பல முனைகளிலும் வெடித்துக் கிளம்புகின்றன. தீர்வு கிடைக்குமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதை கெட்டியாக பிடித்துக்கொண்ட கர்நாடகா, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. செயல் திட்டம் வகுக்கவே கூறியிருக்கிறது’ என மத்திய அரசிடம் முறையிட்டது.

காவிரி பிரச்னையில் நீரின் அளவைத் தவிர, மற்ற அனைத்து அம்சங்களிலும் நடுவர் மன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டதாக தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது. இந்த முரண்பாடை வைத்துக்கொண்டு, இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது. உச்சநீதிமன்றத்தில் கூடுதலாக 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசும் தாக்கல் செய்துள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுக்க போராட்டங்களும் வெடித்திருக்கிறது. காவிரி பிரச்னை தொடர்பான LIVE UPDATES

மாலை 3.00 :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை அதிமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு இல்லை என தோழமை கட்சி எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூறினர்.

பிற்பகல் 2.15 : காவிரி உரிமை மீட்பு கூட்டியக்கம் சார்பில் ஒத்துழையாமை இயக்கம் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார்.

பகல் 1.50 : காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நாளை மற்றும் ஏப்.5 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை திமுகவினர் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

பகல் 1.10 : ‘ராஜினாமா செய்ய வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். தற்போது குழப்பத்தில் உள்ளேன். ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து வருகிறேன்’ என முத்துக்கருப்பன் எம்.பி. கூறினார். அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வரும் சூழலில், திமுக எம்.பி.க்களே தன்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என கூறியதாக முத்துக்கருப்பன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பகல் 1.00 : ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை எனது ராஜினாமா கடிதத்தை அளிக்க முயற்சி செய்வேன். இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திக்க முடியவில்லை’ என அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன் கூறினார்.

பகல் 12.50 : காவிரி பிரச்னையில் அதிமுக எம்.பி.க்கள் அமளியால் இன்றும் மக்களவை முடங்கியது. நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பகல் 12.45 : ‘காவிரி போராட்டத்தில் காலையில் கைதாகி மாலையில் விடுதலையாகும் ஸ்டாலின், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சிறையில் இருக்கத் தயாரா?’ என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பகல் 12.40 : காவிரி பிரச்னையில் ராஜினாமா செய்வது தீர்வாகாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். ‘முத்துக்கருப்பன் எம்.பி.யின் ராஜினாமா, அவருடைய தனிப்பட்ட விருப்பம்’ என்றும் தம்பிதுரை கூறினார்.

பகல் 12.35 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை பீளமேட்டில் திமுக வட்ட கழகச் செயலாளர் முருகேசன் , சிங்கை சதாசிவம் ஆகிய இருவரும் தீ குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பீளமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகல் 12.30 : காவிரி மேலாண்மை வாரியம் கோரி மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முத்துக்கருப்பன் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஏற்க குடியரசு துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கய்யா நாயுடு தயாராக இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘உடல்நிலை சரியில்லை, சொந்த காரணங்கள் என குறிப்பிடப்படும் ராஜினாமா கடிதம் மட்டுமே ஏற்கப்படும். அரசியல் காராணங்களை குறிப்பிட்டு கடிதம் அளித்தால் ஏற்கக்கூடாது’ என்பது மரபு! இது தெரிந்தே காரணத்தை குறிப்பிட்டு முத்துக்கருப்பன் ராஜினாமா கடிதம் வழங்கியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

பகல் 12.15 : காவிரி பிரச்னை குறித்து சீமான், வேல்முருகன், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோர் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.

பகல் 12.00 : காவிரி மேலாண்மை வாரியம் கோரி தஞ்சை, திருச்சி, திருவாரூரில் விவசாயிகள், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பகல் 11.45 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் அருகே திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பகல் 11.35 : ‘ஏப்.5-ல் முழு அடைப்புப் போராட்டத்தை மதிமுகவினர் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.
காவிரி உரிமை மீட்புப் போராட்டத்திற்கு தமிழகம் அணி திரளட்டும்’ என வைகோ அறிக்கை விடுத்திருக்கிறார்.

பகல் 11.30 : ‘காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஏற்கனவே அறிவித்தபடி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஏப். 3 ஆம் தேதி கடையடைப்பு நடைபெறும். ஏப்.5 ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் நடத்தும் கடையடைப்பில் பங்கேற்பது பற்றி ஏப்.3 ஆம் தேதி தெரிவிப்போம்’ என சங்கத் தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

பகல் 11.15 : தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

பகல் 11.00 : கால அவகாசம் கேட்டு மத்திய அரசு தொடுத்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிப்பிடுவது அல்ல. காவிரி பிரச்னையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது தான் ஸ்கீம்!’ என கருத்து தெரிவித்தனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close