காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு : மத்திய அரசின் மோசடி என வைகோ பாய்ச்சல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிப்பது மத்திய அரசின் மோசடி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவிப்பது மத்திய அரசின் மோசடி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் முரண்பாடாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடனேயே நான் அறிக்கை தந்தேன். கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷாவும், மிகத் தந்திரமாகக் காய்களை நகர்த்துகின்றார்கள்.

தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்றம் வழங்கிய 192 டிஎம்சி தண்ணீரைக் குறைப்பதற்காக, பெங்களூரு குடிநீர்த் தேவையைச் சுட்டிக் காட்டியது மட்டும் அல்லாமல், தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கின்றது என, இந்த வழக்குக்குத் தொடர்பு இல்லாத ஒரு கருத்தையும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருக்கின்றது.

தமிழகத்தின் தலைநகராம் சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களும், குடிநீருக்காகக் காவிரித் தண்ணீரைத்தான் நம்பி இருக்கின்றன. பிப்ரவரி 22 ஆம் நாள், முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் நான் பேசும்போது, இந்தத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் வாசங்கள் இல்லை; அத்துடன், அதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை வகுக்கலாம்; அந்தத் திட்டத்திலும் நாடாளுமன்றத்தில் மாறுதல்கள் செய்து கொள்ளலாம் என்று கூறி இருப்பது, மேலாண்மை வாரியத்தைப் புறக்கணிப்பதற்காகச் சொல்லப்பட்டது ஆகும். இதனையே காரணமாகக் காட்டி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் செய்யப் போகின்றது; நரேந்திர மோடி அரசில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது என்று சொன்னேன்.

அன்று நான் கூறியது, இன்று நடந்து விட்டது. இன்று காலையில் தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், கர்நாடக மாநிலம், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, ‘மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் இல்லை; ஒரு திட்டம் வகுக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கின்றது’ என்று கூறி உள்ளது.

இப்படி, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது இல்லை என்று, கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழி செய்து இருக்கின்றது. மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கும் என நாம் நம்ப வேண்டியது இல்லை; அப்படி அமைப்பதாக இருந்திருந்தால், கடந்த நான்கு வார காலத்திற்குள் அமைத்து இருக்கலாம்.

அதனால்தான், நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியம் அற்றது என்று, தமிழர்களைத் துச்சமாகக் கருதிச் சொல்லிவிட்டுப் போனார்.

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் எவ்வளவோ முயன்றும், பிரதமர் அந்தக் கோரிக்கையைக் குப்பைத்தொட்டியில் தூக்கி எறிந்து விட்டார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்பது, ஏழரைக்கோடித் தமிழக மக்களின் ஒருமித்த கருத்து ஆகும். தமிழ்நாட்டைப் பல வகையிலும் நாசம் செய்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு செயல்படுகின்றது. மீத்தேன், சேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தி, தமிழகத்தைப் பாலைவனமாக்க மத்திய அரசு தீர்மானித்து விட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நாம் கோரி வருகின்ற நிலையில், நாகை, திருவாரூர் மாவட்டங்களை, பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மத்திய அரசு அறிவித்து விட்டது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை அடியோடு பாழாக்க முனைந்து விட்ட நிலையில், நாம் என்ன செய்யப் போகின்றோம்?

அது மட்டும் அல்ல; மேகே தாட்டுவிலும், ராசி மணலிலும் காவிரிக்குக் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்ட ஏற்பாடு செய்துள்ள நிலையில், மத்திய அரசு அதற்கு ரகசியமாகப் பச்சைக்கொடி காட்டி விட்டது. வெளிப்படையாக அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 7,8 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் வீட்டில் நடைபெற்ற சதி ஆலோசனைக் கூட்டத்திலேயே இந்தத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து விட்டது என்பதைக் காவிரி டெல்டா மக்களிடம் எடுத்துச் சொல்லத்தான், நான் மூன்று மாவட்டங்களில் பரப்புரை செய்தேன்.

இப்போது அணைகளைக் கட்டப் போகின்றார்கள். இனி பெருமளவு வெள்ளம் வந்தாலும், கபினி, கிருஷ்ணராஜ சாகருக்கே தண்ணீர் வராது; மேட்டூருக்குச் சொட்டுத் தண்ணீர் வரப்போவது இல்லை. தமிழகத்தைப் பஞ்சப் பிரதேசமாக ஆக்கி, கார்பரேட் கம்பெனிகள் இலட்சக்கணக்கான ஏக்கர்களை அடிமாட்டு விலைக்கு வாங்க வகுக்கப்பட்டுள்ள திட்டத்தைச் சில ஆண்டுகளுக்குள் செயல்படுத்த முனைவார்கள்.

தமிழ்நாட்டுக்கு மிகமிக சோதனையான காலம் இது. எனவே, சட்டப்பேரவைக் கூட்டம் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருப்பினும், அதற்கு முன்பே, அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாகக் கூட்ட வேண்டுகிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close