காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தொண்டாமுத்தூர் பகுதியில் 2 லட்சம் மரங்கள் நடவு செய்த நிலையில், அதற்கான நிறைவு விழா கோவையில் நடைபெற்றது.
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமைப்பரப்பை 33% வரை அதிகரிக்கவும், நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கவும், நிலத்தடி நீர் மற்றும் மண் வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹோமியோபதி மாநாடு: 6 மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்பு
இதில் முதற்கட்டமாக ரோட்டரி சங்கத்துடன் இணைந்து 1 லட்சம் மரக்கன்றுகள் முதல் இரண்டு மாதங்களிலேயே விவசாயிகள் மூலம் நடப்பட்டது. இதனை தொடர்ந்து, இரண்டாவது பகுதியாக கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்துடன் (சிபாகா) இணைந்து மேலும் 1 லட்சம் மரக்கன்றுகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்கப்பட்டது.

காவேரி கூக்குரல் இயக்கமும், கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கமும் (CEBACA) இணைந்து கோவை பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக 1 லட்சம் மரங்கள் வழங்கி அதன் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இதற்கான நிறைவு விழா போத்தனூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட 10 கிராம பஞ்சாயத்து மற்றும் 5 நகர பஞ்சாயத்தை சார்ந்த கிராமப்புற விவசாயிகளின் 600 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் இலவசமாக நடப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் மரங்களுக்கான மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காவேரி கூக்குரல் இயக்கம் இதுவரையில் 2.3 கோடி மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. அதில் தமிழகத்தில் மட்டும் 1 கோடி மரங்களும், பசுமை தொண்டாமுத்தூர் நிகழ்வுகளின் மூலம் மட்டுமே 2 லட்சம் மரங்களும் வழங்கியிருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஜி்.டி.வீலர் நிறுவனத்தின் இயக்குனர் ராஜ்குமார், பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், காவேரி கூக்குரல் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சிபாகா தலைவர் சுவாமிநாதன், இயற்கை விவசாயியும் சமூக ஆர்வலருமான வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil