காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால் கர்நாடகா - தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை காரணம் காட்டி கர்நாடகா அரசு காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது. அதேநேரம், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு காவிரி விவாகாரம் தொடர்பாக முறையிட்டுள்ளது.
இந்தநிலையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து கர்நாடகத்தில் விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டியாவில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள விஸ்வேஸ்வரய்யா பூங்காவில் 34 ஆவது நாளாக விவசாயிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக முதலமைச்சர் மற்றும் பல அரசியல் தலைவர்களும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றில் தொடர்ந்து தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடகா அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் காவிரி நீர் திறப்பதில் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்களை அரசியல் கட்சியினர் நடத்தினர்.
இந்நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூரில் இன்று (அக்டோபர் 7) தி.மு.க விவசாய அணி மற்றும் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், டெல்டாவில் எஞ்சியுள்ள குறுவை பயிரை காப்பாற்ற தேவையான தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெறுவது, அனைத்து கட்சி, அமைப்புகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒற்றுமையை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள், எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது கர்நாடகா அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.
காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 11 ஆம் தேதி முழு அடைப்பு உள்ளது. மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“