காவிரி போராட்டக் களமாகும் மெரினா : நள்ளிரவில் பெசன்ட் நகர் பீச்சில் திரண்ட இளைஞர்கள்

காவிரி பிரச்னையில் மெரினா கடற்கரை போராட்டக் களமாகிறது. பகலில் மெரினாவில் போராடியதைப் போல, இரவில் பெசன்ட் நகர் பீச்சில் இளைஞர்கள் திரண்டனர்.

காவிரி பிரச்னையில் மெரினா கடற்கரை போராட்டக் களமாகிறது. பகலில் மெரினாவில் போராடியதைப் போல, இரவில் பெசன்ட் நகர் பீச்சில் இளைஞர்கள் திரண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது. ஆளும்கட்சியான அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. ஆனாலும் மத்திய அரசு மேலும் 3 மாதங்கள் இதில் முடிவெடுக்க அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருப்பது தமிழர்களை அதிர வைத்திருக்கிறது.

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பலர் நேற்று பகலில் திடீரென திரண்டு காவிரி பிரச்னையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும் முகநூல் மூலமாக பிரச்சாரம் செய்து இணைந்தவர்கள். இதை போலீஸ் எதிர்பார்த்தே இருந்தது. எனவே சற்று நேரத்தில் அவர்களை மடக்கி போலீஸார் கைது செய்தனர்.

மெரினா போராட்டத்தை முறியடித்துவிட்டதாக போலீஸார் நினைத்திருந்த நிலையில், இரவில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர்கள் குவிந்தனர். அவர்களும் கைகளில் காவிரியில் நியாயம் கேட்டு எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல இளைஞர்கள் மெரினாவை முற்றுகையிட தயாராகி வருவதாகவே தகவல்கள் வருகின்றன. எனவே மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நடைபயணம் செய்கிறவர்களுக்கும்கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கூட்டமாக வருகிறவர்களை போலீஸ் அங்கு அனுமதிப்பதில்லை.

 

×Close
×Close