ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த தடியடியில் காயமடைந்தவர்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. அண்ணா சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள் சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி செல்ல முயற்சித்தபோது, போலீஸார் தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியில் இயக்குனர் களஞ்சியம், கரூர் ரமேஷ் உள்பட சிலர் காயம் அடைந்தனர்.
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த இயக்குனர் களஞ்சியம், கரூர் ரமேஷ் ஆகியோர் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிற களஞ்சியம், ரமேஷ் ஆகியோரை நேற்று (ஏப்ரல் 13) சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்களை பல்வேறு இயக்கத் தலைவர்கள், போராட்டக்காரர்கள் தொடர்ந்து
மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிக்கொண்டிருக்கும் சூழலில், யாரும் எதிர்பாராத வகையில் சென்னை காவல்துறை ஆணையர் ஏகே.விசுவநாதன் ஆறுதல் கூறியதை தமிழ் அமைப்பினர் பலரும் வரவேற்றனர். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் கோரியுள்ளார் ஆணையர்.
இயக்குநர் களஞ்சியம், “போராட்டத்தில் என்ன நடந்தது”என்பதை விளக்கியுள்ளார். எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக்கொண்டு ஆறுதல் கூறி விடை பெற்றார். இந்த அணுகுமுறை ஒரு முன்மாதிரியான செயல்பாடு என தமிழ் அமைப்பினர் குறிப்பிட்டனர்.