காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி இன்று தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் அளவிலான போராட்டங்கள் நடைபெறுகின்றன. முழு அடைப்பும் அதில் அடங்கும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்திருக்கிறது. காவிரி போராட்ட வரலாற்றில் இன்று (ஏப்ரல் 3) முக்கியமான நாள்! தமிழ்நாட்டின் அனைத்து விவசாய அமைப்புகளும் இணைந்து மறியல் நடத்துகின்றன. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு நடக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கு பாஜக தவிர அத்தனை கட்சிகளும் ஆதரவு கொடுக்கின்றன. வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி மாநில ஆளும் கட்சியான அதிமுக இன்று 32 மாவட்டங்களின் தலைநகர்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கிறது. அரசியல் கட்சிகளைத் தாண்டி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
காவிரிப் போராட்டம் தொடர்பான LIVE UPDATES
பகல் 12.25 : திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற டிடிவி தினகரன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற தினகரன் கட்சியினரால் பரபரப்பு - தள்ளுமுள்ளு.#AMMK #TrichyAirport #CauveryIssue #CauveryManagementBoard @karthickselvaa @Ahmedshabbir20 @Stalin_Tweets @AishwaryaPT pic.twitter.com/LYDVWl77Ha
— Arun.R.S (@Arun01066836) 3 April 2018
பகல் 12.00 : திருச்சியில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
பகல் 11.55 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏப்ரல் 6-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
பகல் 11.50 : ‘காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம். தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காததால், திமுக போராட்டம் நடத்துகிறது’ என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பகல் 11.45 : டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார். தமிழகத்தில் காவிரி பிரச்னையில் போராட்டங்கள் வலுத்து வருவது குறித்து பிரதமரிடம் உரையாடியதாக தெரிகிறது.
பகல் 11.00 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி சென்னை எழும்பூரில் ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காலை 10.00 : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு ஓட்டல் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 58 அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
காலை 6.40 : உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அடித்து நொறுக்கிய நிகழ்வு டெல்லி வரை எதிரொலிக்கிறது. ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்த நிகழ்வு, சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இந்தி எழுத்துக்கள் மீது செருப்பால் அடித்து மே 17 இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியது ஆகியனவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர், தலைமை வழக்கறிஞர் ஆகியோரை அழைத்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் கேட்டார். அடுத்த நாளே மத்திய அரசின் அழைப்பை ஏற்று அவர் டெல்லிக்கு விரைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை தகவல் அனுப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
காலை 6.30 : ஏப்ரல் 5-ம் தேதி முழு அடைப்பு அறிவித்திருக்கும் திமுக, இன்றைய முழு அடைப்புக்கும் தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. தவிர, தினமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது திமுக. அந்த அடிப்படையில் திமுக.வினர் 3-வது நாளாக தொடர்ந்து இன்றும் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்துகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.