காவிரி முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு ரயில் மறியலில் கைதான அன்புமணி, தொண்டர்களுடன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பா.ம.க. தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஆதரவு கொடுத்தன.
காவிரி உரிமைக்கான இந்த முழு அடைப்புக்கு பாமக செல்வாக்காக உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கணிசமான ஆதரவு கிடைத்தது. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பரவலாக பாமக.வினர் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னை எழும்பூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர் அன்புமணி உள்பட 560 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எழும்பூர் ராஜரத்தினம் திடலில் பார்வையாளர்கள் அமரும் காலரியில் தொண்டர்களுடன் மருத்துவர் அன்புமணி தங்க வைக்கப்பட்டார். ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட அந்த அரங்கு அனலை கக்குவதாக இருந்தது. அங்கு ஏ.சி. வசதி எதுவும் இல்லை. அப்போது அன்புமணியை அணுகிய நிர்வாகிகள் சிலர், ‘முக்கிய தலைவர்களை கைது செய்தால் ஏ.சி. ஹால் ஏற்பாடு செய்து கொடுக்கும் வழக்கத்தை சென்னை போலீஸார் வைத்திருக்கிறார்கள்.’ என சொல்ல, சிரிப்போடு அதை மறுத்தார் அன்புமணி!
அன்புமணியுடன் மாலை வரை திரளான தொண்டர்கள் அங்கு தங்கியிருந்தனர்.