சேப்பாக்கத்தில் காவிரி போராட்டம் : மெரினாவில் நுழைய விடாமல் போலீஸ் குவிப்பு

காவிரி போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கத்தில் வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மெரினாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

காவிரி போராட்டத்திற்காக சென்னை சேப்பாக்கத்தில் வேல்முருகன் தலைமையில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மெரினாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி இதற்கு அனுமதி அளித்தபோதும், டிவிஷன் பெஞ்ச் அந்த உத்தரவுக்கு தடை விதித்தது.

காவிரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு இன்று (ஏப்ரல் 29) சென்னை, மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்துவிட்டால், அவர்களை அப்புறப்படுத்துவது சிரமம் என உணர்ந்த போலீஸ் அதற்கு அனுமதிக்கவில்லை.

சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகே இன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்காக அங்கே மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. எனினும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம் பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் பெருமளவில் அங்கு திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேப்பாக்கம் போராட்டத் திடலுக்கும், மெரினாவுக்கு இடையே தூரம் சுமார் 200 மீட்டர்தான்! எனவே போராட்டக்காரர்கள் மெரினாவை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது என பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கும், மெரினாவுக்கும் இடையே தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள் போலீஸார்.

சேப்பாக்கத்தில் போராட்டத் திடலில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்தனர். இந்தப் போராட்டத்தில் பழ.நெடுமாறன், வேல்முருகன், தோழர் தியாகு, தெகலான் பாகவி, திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

 

 

×Close
×Close