காவிரிப் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
காவிரி போராட்டம் தமிழகத்தில் வீரியமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் இங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாம் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி சென்னையில் நடத்தப் போவதாக தெரிவித்தது.
காவிரி உரிமை மீட்புக் குழுவினரின் ஆவேச போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று (ஏப்ரல் 10) இந்த சீஸனில் சென்னையில் முதல் போட்டி நடைபெற்றது. வருகிற 20-ம் தேதி சென்னையில் 2-வது போட்டி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 6 ஆட்டங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டன. வருகிற 20-ம் தேதி ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த விடமாட்டோம் என இன்று சீமான், பாரதிராஜா, வேல்முருகன் உள்ளிட்டோர் அறிவித்தனர்.
காவிரி போராட்டம் எதிரொலியாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த 6 ஐபிஎல் போட்டிகளையும் வேரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. எனினும் ஐபிஎல் நிர்வாகம் இதை உறுதி செய்யவில்லை.
காவிரி உரிமை மீட்புக் குழுவினரை திசை திருப்பும் வகையில் இந்தத் தகவல் பரப்பப்படுகிறதா? என்கிற சந்தேகம் இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். அதே சமயம் பழ நெடுமாறன் கூறுகையில், ‘நேற்று தமிழர்கள் நடத்திய வீரியம் மிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது’ என குறிப்பிட்டார்.