காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 3-வது நாளான இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் அன்னப்பன் பேட்டையில் இருந்து நடை பயணத்தைத் தொடங்கினார்.
காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இரு குழுக்களாக நடத்த திமுக தலைமையில் கடந்த 6-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி முக்கொம்பில் இருந்து முதல் குழு மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7-ம் தேதி புறப்பட்டது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ், தி.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இரவு தஞ்சை மாவட்டம் கல்லணையில் பொதுக் கூட்டத்துடன் காவிரி உரிமை மீட்பு பயணம் முடிந்தது.
இரண்டாம் நாளான நேற்று, தஞ்சையின் சூரக்கோட்டை பகுதியில் துவங்கிய நடைபயணம் வாண்டையார் இருப்பு பகுதியில் முடிவடைந்தது. அப்போது பேசிய ஸ்டாலின், "காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி எள்ளவிற்கு கூடத் தமிழகத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லை. அவர் வரும் 12ம் தேதி சென்னை வர இருப்பதாகச் சொல்கிறார்கள். மோடி சாலை மார்க்கமாக வந்தாலும், ஹெலிகாப்டர் மூலம் வந்தாலும் கறுப்பு கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம். அன்று மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், கறுப்பு உடை அணிந்தும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், 3-வது நாளாக இன்று காலை தஞ்சை மாவட்டம் அன்னப்பன் பேட்டையில் இருந்து ஸ்டாலின் தனது நடைபயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து வருகிற 10-ந்தேதி திருவாரூரிலும், 11-ந்தேதி நாகையிலும் நடைபயணம் நடைபெறுகிறது. பின்னர் 13-ந்தேதி கடலூர் மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு பெறுகிறது.
இந்தச் சூழ்நிலையில், காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் 2-வது குழுவை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கிறது. அரியலூரில் இருந்து மாலை 4 மணிக்கு இந்த நடைபயணம் தொடங்குகிறது.