தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்னை நிலவி வரும் நிலையில், பெங்களூருவில் தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்த் நடத்திய, ஊடகச் சந்திப்பில் புகுந்த கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட நடிகர் சித்தார்த்த் தனது சித்தா படத்தின் புரமோஷனுக்காக பெங்களூருவில் ஊடகவியலாளர் சந்திப்பு வியாழக்கிழமை நடத்தினார்.
கன்னட அமைப்பான கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பினர் பெங்களூருவில் நடைபெற்ற நடிகர் சித்தார்த்தின் ஊடகச் சந்திப்பின் போது உள்ளே புகுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கன்னட அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, செய்தியாளர் சந்திப்பு நடத்த இது சரியான நேரம் அல்ல என்று கன்னட அமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து, சித்தார்த் தனது ஊடகச் சந்திப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று கூறிய நடிகர் பிரகாஷ் ராஜ், கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளர்.
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது: “நீண்ட காலமாக இருக்கும் பிரச்னையைத் தீர்க்காமல் வைத்திருக்கும் அணைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.