Advertisment

காவிரிக்காக தமிழக பா.ஜ.க போராட்டம்: அண்ணாமலை திடீர் அறிவிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16 ஆம் தேதி தமிழக பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Oct 11, 2023 12:54 IST
New Update
Cauvery row TN BJP chief K Annamalai announce Protest Tamil

'தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன' என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tamilnadu-bjp | Annamalai: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் நாள்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, கர்நாடக அரசை கண்டித்தும், இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Advertisment

இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், வணிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ஆம் தேதி தமிழக பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்  தலைமையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், இந்த  உண்ணாவிரத போராட்டம் கும்பகோணத்தில் நடைபெறும் என்றும் அண்ணாமலை தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:- 

2018 ஆம் ஆண்டு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக, எந்தப் பிரச்சினையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது. கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தன் கூட்டணியில் இருக்கும், காங்கிரஸ் கட்சியின், கர்நாடக மாநில அரசைக் கண்டித்து இதுவரையில் ஒரு வார்த்தை கூடப் பேசாத திமுக, சட்டசபையில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று சொல்லி, ஒரு கண்துடைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தன் வழக்கமான தீர்மான நாடகத்தை திமுக, திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறது.

சட்டசபை விவாதத்தில், அத்தீர்மானத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினரான அக்கா திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் பேசியபோது, அவரை முழுவதுமாகப் பேச விடாமல் குறுக்கீடு செய்வதும், ஒலிபெருக்கியை நிறுத்துவதும், அவரின் கருத்துக்களை மக்களிடத்தில் செல்ல விடாமல் ஒளிபரப்பை தடை செய்வதும் ஜனநாயகப் படுகொலையாகும். சட்டமன்றத்தில் திமுகவின் வரலாற்றுப் பிழைகளும், ஆண்டாண்டு காலத் தவறுகளும், மக்களுக்கு இழைத்த துரோகங்கள் அனைத்தும் வெளிவந்து விடுமோ என்ற பதட்டம் தான் தெரிந்ததே தவிர, விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ, திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை

தமிழகத்துக்கும், கேரளா, கர்நாடகா அண்டை மாநிலங்களுக்குமிடையே தீர்க்கப்படாத நதிநீர்ப் பங்கீடு, அணை கட்டும் பிரச்சினை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான சிக்கல்களும், பிரச்சனைகளும், திமுக ஆட்சிக்காலத்தில் உருவானவை. இவற்றுக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முயற்சிக்காமல், வீண் நாடகமாடி நீண்டகாலமாக தமிழக மக்களை, திமுக ஏமாற்றி வருகிறது.கர்நாடகா அணைகளில் 80%-த்திற்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தண்ணீரைப் பெற்றுத்தர திறனின்றி நடத்துகின்ற போராட்டம்கண்டனத்துக்குரியது. 

ஆட்சியில் உள்ள மாநில அரசு, தண்ணீரைத் தர மறுக்கும், தன் கூட்டணிக் கட்சியைப்பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசைக் குறை கூறுவது, ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது. காவிரி தண்ணீருக்காக கண்துடைப்பு கடையடைப்பு நடத்துவது திமுகவின் கபட நாடகம். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஏமாற்றும் வேலை. பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி திங்கட்கிழமையன்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 

இந்த உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னாள் அமைச்சர் தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைக்க, மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களின் தலைமையிலே, கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் திரு. கரு நாகராஜன் அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பொன்பாலகணபதி அவர்களும், மாநில விவசாய அணி தலைவர் திரு ஜி கே நாகராஜ் அவர்களும், பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் இன்னம் பெருந்திரளாக விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசுமுறை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசியல் லாபங்களுக்காக, நாடகமாடும் திமுக, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது. தொடரும் திமுகவின் துரோக வரலாற்றைத் தோலுரித்துக் காட்ட 16-10-2023 அன்று கும்பகோணத்தில் நடத்தப்படும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Annamalai #Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment