தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை (ஏப்ரல் 1) காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக சுமார் 65 ஆண்டுகளாக விவசாயிகள் குரல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக காவிரி ஆற்றில் இருந்து தெற்கு வெள்ளாறு, வைகை, கிருதுமால் நதி, குண்டாறு வரை ஏறத்தாழ 262 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைத்து, அதன் உபரி நீரை கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கரூர் மாவட்டம் காவிரி மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.5கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தெற்கு வெள்ளாற்றில் இருந்து வைகை ஆறு வரை 109 கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டாம் கட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதி வழியாக குண்டாறு வரை 34 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.
எனினும், இந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவுபெறாமல் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைத்த நிலையில், இத்திட்டம் தற்போது வரை நிறைவுபெறாமல் இருக்கிறது என்று அ.தி.மு.க-வினரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த சூழலில், நாளைய தினம் (ஏப்ரல் 1) நடைபெறவுள்ள சட்டப்பேரவை அமர்வில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப் பணிகள் குறித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.
அதன்படி, இந்த தீர்மானம் மீது நாளை சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்க இருக்கிறார்.