Advertisment

காவிரி- வெண்ணாறு மறு சீரமைப்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி வழங்க மத்திய அரசு தடை: பி.ஆர் பாண்டியன் கண்டனம்

தெலங்கானா அரசை பின்பற்றி தமிழ்நாடு விவசாயிகளுக்கு சாகுபடி மேற்கொள்வதற்கு ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு 15,000 முழு மானியத்தில் வழங்கிட அரசு முன்வர வேண்டும்- பி.ஆர் பாண்டியன்

author-image
WebDesk
New Update
PR pandi

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை நெருங்கி விட்டது. இன்று காலை நிலவரப்படி 110 அடியை மேட்டூர் அணை எட்டி உள்ளது. இதனால் நாளை முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டும்போது பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும். காவிரியில் அதிக அளவு நீரும் வெளியேற்றப்படும். இந்த நிலையில் டெல்டாவில் பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடப்பது வேதனை அளிப்பதாக விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழ்நாடு அனைத்து  விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி டெல்டாவில் மிகப்பெரும் பாசன ஆறுகளான கோரையாறு, பாமணி ஆறு, முள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மத்திய அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழ்நாட்டிற்கு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழக மக்கள் விவசாயிகள் மிக பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இச்செயல் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குழைக்கும் நடவடிக்கை ஆகும். 

 குறிப்பாக காவிரி டெல்டாவில் வெண்ணாறு பாசன பகுதியில் கடல்  முகத்துவார ஆறுகளை மறுசீரமைக்கும் பணிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கட்ட நிதிக்கு அனுமதிக்கப்பட்டு உலக வங்கி நிதி மூலம் ரூபாய் 960 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவடைந்துள்ளது. இரண்டாவது கட்ட பணிக்கு கோரையாறு, பாமணி ஆறு உள்ளிட்ட பல்வேறு கிளை ஆறுகளை சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு உலக வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உலக வங்கி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நிதி தருவதற்கான ஒப்புதல் அளித்துள்ளனர்.  

அதனை பெறுவதற்கு மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு உரிய அனுமதி வழங்க மறுத்ததால் கடந்த மூன்று ஆண்டு காலமாக பணிகள் மேற்கொள்ளாததால் ஆறுகள் புதர் மண்டி பாசன காலத்திலும், வெள்ள காலத்திலும் மிகப்பெரும் பேரிழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்கீடு பெற முடியாமல் மத்திய அரசு தடை செய்வதால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் விவசாயிகளும் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். உணவு உற்பத்தி மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய அரசு உரிய நிதியை பெற அனுமதி வழங்க வேண்டும். காவிரி உபரி நீர் திட்டமான காவிரி வைகை -குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு உடன் நிதி ஒதுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன்.

தமிழ்நாடு அரசு தற்போது வந்து கொண்டிருக்கிற காவிரி உபநீரை மேட்டூர் அணை மூலம் வறண்டு கிடக்கிற ஏரிகளுக்கு குளங்களுக்கும் நிரப்புவதற்கு காவல்துறை, நீர்ப்பாசன துறை, வருவாய் துறை கொண்ட குழுக்கள் அமைத்து கண்காணித்து நிரப்பிட வேண்டும். ஒருபோக சம்பா சாகுபடிக்கு தேவையான நடுத்தர கால மற்றும் நீண்ட கால நெல் விதைகள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தெலங்கானா அரசை பின்பற்றி தமிழ்நாடு விவசாயிகளுக்கு சாகுபடி மேற்கொள்வதற்கு ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு 15,000 முழு மானியத்தில் வழங்கிட முன்வர வேண்டும்.  சென்ற ஆண்டு சம்பாவும், குறுவையும் பாதிக்கப்பட்டது. நடப்பாண்டு குறுவை முற்றிலும் இழந்த நிலையில் ஒருபோக சம்பா சாகுபடி மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெற்ற கூட்டுறவு கடனுக்கான வட்டி சலுகை பெறும் காலம் முடிவடைய உள்ளது. அதற்குள்ளாக தமிழ்நாடு அரசு கூட்டுறவு கடன் முழுமையும் தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க முன்வர வேண்டும். 

குறுவைக்கு தொகுப்பு திட்டம் வழங்குவது போல சம்பாவிற்கும் தொகுப்பு திட்டம் வழங்கி விவசாயிகளை சாகுபடியில் ஈடுபட ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார். இந்த ஆய்வுப் பணியின் போது, மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் மணிமாறன் உடன் இருந்தனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

     

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment