காவிரி தீர்ப்பில் பற்றாக்குறை காலத்தில் நீர் பங்கீடு குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை. எனவே இக்கட்டான சூழல்களில் கர்நாடகா தண்ணீர் திறக்குமா?
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 16) இறுதி தீர்ப்பை வழங்கியது. காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதி உத்தரவில் தமிழ்நாட்டுக்கு அறிவித்த 192 டி.எம்.சி தண்ணீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரை குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 14.75 டி.எம்.சி. என்பது ஒன்றரை ஆண்டுகளுக்கு சென்னை மாநகரின் குடிநீர் தேவையை போக்க போதுமான தண்ணீர் ஆகும்.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவில் 205 டி.எம்.சி.யாக இருந்த நீர், நடுவர் மன்ற இறுதி உத்தரவில் 192 டி.எம்.சி ஆகி, இப்போது அதைவிடவும் குறைந்து 177.25 டி.எம்.சி ஆகியிருப்பது டெல்டா விவசாயிகளை அதிர வைத்திருக்கிறது. இது போதாது என்பது ஒருபுறம் இருக்க, இந்த தண்ணீரையும் முறையாக கர்நாடகா திறந்து விடுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் மூலமாக தெரிய வந்திருப்பதாக தங்களது உத்தரவில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டே 14.75 டி.எம்.சி நீரை கூடுதலாக கர்நாடகாவுக்கு வழங்கியிருக்கிறது. இரு மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்னைகளில், முதல் முறையாக இந்த உத்தரவில்தான் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அளித்த இந்த 465 பக்க உத்தரவு, இதர மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நிலத்தடி நீர் இருப்பு குறித்து, இனி வாதங்களில் மாநிலங்கள் முன்வைக்கும். இரு மாநிலங்கள் இடையே நீர் பங்கீட்டில், ‘நெகிழ்வுத் தன்மை’ குறித்தும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
காவிரி வழக்கில் தமிழ்நாடு வழக்கறிஞர் சேகர் நாப்டே தனது வாதத்தின்போது, ‘நிலத்தடி நீரை, ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் மண்ணின் தன்மை, மழை போன்ற காரணிகளால் அது மாறுபடக்கூடியது’ என கூறியிருந்தார். ‘நர்மதா நீர் பங்கீடு நடுவர் மன்றம், கிருஷ்ணா நீர் பங்கீடு நடுவர் மன்றம் ஆகியவை நிலத்தடி நீரை கணக்கில் எடுக்கவில்லை. காவிரி நடுவர் மன்றமும் இதை பதிவு செய்திருக்கிறது’ என சேகர் நாப்டே தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
ஆனால் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் நாப்டேவின் இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ‘20 டி.எம்.சி நிலத்தடி நீர் டெல்டா மாவட்டங்களில் இருப்பதை நடுவர் மன்றமும் உறுதி செய்திருக்கிறது. சந்தேகத்திற்கு இடமில்லாமல், அதில் 10 டி.எம்.சி.யாவது காவிரி நீருக்கு தொடர்பில்லாமல் டெல்டா மாவட்டங்களுக்கு கிடைக்கும்.’ என நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
காவிரி வழக்கில் நிலத்தடி நீர் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒரு முன்னுதாரணம் என கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் கடார்கி ஒப்புக்கொண்டார். அவரே தொடர்ந்து கூறுகையில், ‘நர்மதா, கிருஷ்ணா நீர் பங்கீடு நடுவர் மன்றங்களில் நிலத்தடி நீரையும் ஒரு நீராதாரமாகவே குறிப்பிட்டார்கள். ஆனால் அங்கு அவை அளவில் வெகு சொற்பமாக இருந்ததால், அவற்றின் அளவு குறித்து மதிப்பீடு செய்யவில்லை’ என்றார் மோகன் கடார்கி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஸிடம் பேசிய கடார்கி, ‘இந்த உத்தரவை, தமிழகத்திற்கு சாதகமில்லாத உத்தரவு என கூற முடியாது. இது ஒரு அமல்படுத்தத் தக்க உத்தரவு. அதிகம் பாதிக்கப்படும் மாநிலத்திற்கு எப்போதும் சாதகமாக இருக்கும். அமல்படுத்த முடியாத ஒரு உத்தரவை போடுவதால் யாருக்கு லாபம்? அதனால் ஒவ்வொரு ஆண்டும் தேவையில்லாத தகறாறுதான் நடந்து கொண்டிருக்கும்’ என குறிப்பிட்டார்.
இந்தத் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு இன்னொரு பின்னடைவு, பெங்களூரு முழுமைக்கும் காவிரி நீர் வழங்குவது தொடர்பான பார்வை! ஏனென்றால், பெங்களூரு நகரின் 64 சதவிகித பகுதி காவிரி வடிகாலுக்கு தொடர்பில்லாத ஏரியா! காவிரி நடுவர் மன்றம், பெங்களூரு மாநகரில் மூன்றில் ஒரு பங்கு பகுதிக்கு குடிநீர் வழங்குவதை மட்டுமே பரிசீலனையில் எடுத்துக் கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘பெங்களூருவின் இதர பகுதிக்கும் இங்கிருந்து குடிநீர் வழங்குவது தேசிய நீர் கொள்கை மற்றும் நீர் பங்கீடு தொடர்பான 1966-ம் ஆண்டின் ஹெல்சிங்கி விதிகளுக்கு எதிரானது. இது குழப்பங்களுக்கு வழி வகுக்கும்’ என்றார். அது ஏற்கப்படவில்லை. இங்குதான், ‘நெகிழ்வுதன்மை’ குறித்து பேசுகிறது உச்ச நீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இரு தரப்பையும் பேலன்ஸ் செய்யும் விதமானது என கூறும் கர்நாடக அரசு வழக்கறிஞர் மோகன் காடர்கி, ‘பற்றாக்குறை காலங்களில் நீரை எப்படி பகிர்வது என்பதை உச்சநீதிமன்றம் கூறவில்லை’ என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
‘கடந்த 27 ஆண்டுகளில் மழை குறைவாக பெய்த 4 ஆண்டுகளைத் தவிர (1996-1997, 2002-2003, 2012-2013, 2016-2017) மற்ற ஆண்டுகளில் இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படவில்லை என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினோம். ஆனாலும் மழை குறைவான ஆண்டுக்கு தண்ணீர் பங்கீடு குறித்து எந்த ஃபார்முலாவும் உருவாக்கப்படவில்லை. அதை எப்படிச் செய்வது என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது’ என்கிறார் மோகன் காடர்கி.
குடியரசு தலைவரின் மேற்பார்வையில் அமைய இருக்கும் தன்னாட்சி அமைப்பான காவிரி மேலாண்மை வாரியம்தான் இதை சரி செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.