/indian-express-tamil/media/media_files/2025/05/22/SApoEbgbGGpWyvj0nxbq.jpg)
Cauvery water dispute
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே. ஹால்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர். சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத் தரப்பில், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடுவதில்லை. தற்போது தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஜூன் மாதத்திற்குத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரையும் சேர்த்து மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.