கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர், முறையாகக் கிடைக்காததால் குறுவை சாகுபடியைத் தொடங்கிவிட்டுப் போதிய நீர் இல்லாமல் காவிரி டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்கள், குறுவை சாகுபடிக்குக் காவிரி நீரையும் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரையும் நம்பியே உள்ளன.
குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டும் வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 4.75 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் வரை பயிரிடப்பட்டுள்ளன.
ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நிலத்தில், 1.5 லட்சம் ஏக்கர் அளவுக்கு மோட்டார் மூலம் நீர் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட நீர் பாசன வசதிகள் உள்ளன.
மீதமுள்ள சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் காவிரி நீரை நம்பி தான் இருக்கிறார்கள். மேட்டூர் அணையிலிருந்து எப்போதும் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டதை நம்பி, விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டனர். ஆனால் தற்போது நீர் வரத்து போதவில்லை.
கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை. கர்நாடகாவிலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை.
தண்ணீர் கிடைக்கும் என நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தற்போது பயிர்களை காப்பாற்ற முடியுமா இல்லையா என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
காவிரி நீர் மேலாண்மை உத்தரவின் படி தமிழ்நாட்டுகு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி நீர் கிடைத்திருக்க வேண்டும். ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி நீர் கிடைக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டி.எம்.சி நீர் கர்நாடகாவில்லிருந்து கிடைக்க வேண்டும்.
ஆனால் ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய நீரே இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு 2.8 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீரை பெற்று தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக.4 ) கடிதம் எழுதியிருந்தார்.
அதில், உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இதனை உறுதி செய்வதற்கு தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்க வேண்டும், என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்த மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், “காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ளன. தங்கள் வாரிசுகளை காப்பதற்காகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு உள்ள பிரச்னை தொடர்பாக (காவிரி விவகாரம்) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்.
ஏனென்றால் அவர்களால் பிரச்னையை தீர்த்துக்கொள்ள முடியாது. தங்களுக்குள் உள்ள சொந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள முடியாத இந்த கோமாளிகள், மக்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பார்கள்” என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.