supreme-court-of-india | tamilnadu-government | karnataka | cauvery-issue: காவிரியில் உரிய நீரை திறந்துவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காவிரி நீர் குறித்த உத்தரவுகளை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நியாயமற்றது என அறிவிக்க கோரியும், தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரியும் கர்நாடக அரசின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரிய தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தனர்.
அப்போது 15,000 கன அடியில் இருந்து 5,000 கனஅடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவை கர்நாடகா குறைத்து வருகிறது. மழை பற்றாக்குறை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம், அதற்காக இருக்கும் நீரைக்கூட தர மறுத்தால் எப்படி? என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, காவரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடியே தண்ணீர் திறக்கப்பட்டுவதாகவும் தமிழ்நாட்டிற்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும் என்று கர்நாடகா தரப்பில் வாதிடப்பட்டது.
அதனை தொடர்ந்து வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், குறைவான மழை பெய்யும் காலங்களில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. இறுதியில், காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை ஏற்க முடியாது என கர்நாடக அரசு கூறுவது தவறு என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“