கர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் 83 அடிக்கு தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும். இரண்டு அணைகளும் விரைவில் நிரம்பும் நிலை இருந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டிருந்தது. தற்போது கர்நாடகாவில் தொர்ந்து பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகள் மூலம் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மழை நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதேபோல காவிரி நதியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு தற்போது திறக்கும் தண்ணீரின் அளவை உயர்த்தும்படி நீர்பாசனத் துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.