காவிரி மேலாண்மை ஆணையம் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடகா இழுத்தடித்தது. ஒருகட்டத்தில் அதை பொருட்படுத்தாமல் மத்திய அரசே கர்நாடகம் சார்பில் அந்த மாநில அதிகாரிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது.
அதன்பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், ஒழுங்காற்றுக் குழுவுக்கும் உறுப்பினர்களை அறிவித்தது கர்நாடகா. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். தமிழ்நாடு சார்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பங்கேற்க இருக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா சார்பில் சில பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். குறிப்பாக 10 நாட்களுக்கு ஒருமுறை அணையை திறக்க வேண்டும் என்கிற விதிமுறையையும், என்ன பயிர் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆணைய பரிந்துரையை கேட்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஜூலை 2-ம் தேதி கூட்டத்தில் மேற்படி பிரச்னையை கர்நாடகா எழுப்பும். அதில் தமிழ்நாடு என்ன நிலை எடுப்பது? தமிழகம் சார்பில் வேறு என்னென்ன கோரிக்கைகளை முன்வைப்பது? என்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் டெல்லியில் தமிழக பிரதிநிதி குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.