தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி கேரளா கர்நாடகா பகுதிகளில் மழை பொழிய தொடங்கியதும் காவிரியில் தண்ணீர் வரத் தொடங்கும். சேலம் மேட்டூர் அணையில் இருந்து வருடம் தோறும் ஜூன் 12-ம் தேதி காவிரியில் டெல்டா பகுதி விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். பருவமழை தொடக்கத்தில் போதிய அளவு மழை பொழியாததால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நீர் நிரம்பாததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதில் தாமதம் ஆனது. இதனால் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்க முடியவில்லை.
இதனை அடுத்து டெல்டா பகுதியில் குருவை சாகுபடி தடைபட்டது. தற்பொழுது சம்பா சாகுபடி துவங்கக்கூடிய காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் அதிகம் மழை பெய்து கர்நாடகா அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு தற்பொழுது மேட்டூர் அணை நிரம்பிவிட்டது. இதனை அடுத்து கடந்த வாரம் மேட்டூர் அணை திறக்கப்பட்டு காவிரிக்கு 30 ஆம் தேதி தண்ணீர் வந்தது 31ஆம் தேதி காலை டெல்டா பகுதி விவசாயத்திற்கு கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதே வேளையில் காவிரி ஆற்றில் இருந்து நேரடி பாசன வசதி பெற முடியாத உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் மேட்டு கட்டளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் ஏரி குளங்கள் ஆகியவற்றுக்கு மாயனூர் பகுதியில் கதவணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் மேட்டு கட்டளை வாய்க்கால் தூர்வாரப்படாததால் இன்னும் வாய்க்கால்கள் வழியே ஏரி குளங்களுக்கு தண்ணீர் வருவது தாமதமாகி வருகிறது.
இதனால் திருவெறும்பூர் பகுதியில் சுமார் 15,000 ஹெக்டேர் நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதாக இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்; திருச்சி முக்கொம்பில் இருந்து 1.60 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்று மூலம் வீணாக கடலில் கலக்கின்றது. காவிரி கொள்ளிடம் கரைபுரண்டும் காவிரி கரையோரம் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. மேலும் காவிரி கரையோரம் உள்ள உயர்கொண்டான் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருவெறும்பூர் பகுதியில் சுமார் 35 ஏரி குளங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும்.
உய்ய கொண்டான் மற்றும் மேட்டு கட்டளை வாய்க்கால் வழியே காவிரி நீர் மூலம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள கூத்தப்பார் குளம், செவந்தா குளம், சம்மத்தி குளம், தொண்டமான் பட்டி குளம், திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை குளம், பத்தாளப் பேட்டை குளம், தட்டான்குளம், அரசங்குடி குளம், நவல்பட்டு பகுதியில் உள்ள தாமரைக் குளம், நவலிகுளம், வெண்டையம்பட்டி ஏரி, ஓடை ஏரி, வெட்டி ஏரி, புது ஏரி, காந்தளூர் ஏரி உள்ளிட்ட 35 ஏரி, குளங்கள் இதன் மூலம் பாசனம் பெற்று இப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தண்ணீர் காலதாமதமாக வருவது தெரிந்தும் நீர்வளத்துறை அதிகாரிகள் உய்யக்கொண்டான் மற்றும் மேட்டு கட்டளை வாய்க்கால்களை சரிவர தூர்வாராததால் மாயனூர் கதவணையில் காவிரி தண்ணீர் திறக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஏரி குளங்களுக்கு இன்னும் தண்ணீர் வராமல் குளங்களும், ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.
இதனால் இப்பகுதியில் சம்பா விவசாயம் செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் மேட்டு கட்டளை வாய்க்கால்களில் உள்ள செடிகள், முட்கள், ஆகாயத்தாமரைகள் போன்றவற்றை உடனடியாக தூர்வாரி தண்ணீர் இப்பகுதிக்கு விரைந்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.