கர்நாடகாவில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கூடாது எனக் கோரி கன்னட அமைப்பினர் நேற்று முழு பந்த் நடத்தினர். இதனை கண்டிக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருச்சியில் கர்நாடக பேருந்துகளை சிறைபிடித்து நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 58 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு மற்றும் எலிக்கறியை வாயில் கடித்தும், மண்டை ஓடுகளையும், எலும்பு துண்டுகளையும் வைத்தும், காவிரி ஆற்றில் இறங்கியும் என பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகாவில் இருந்து தண்ணீரை திறந்துவிட பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கி பெட்ரோல், டீசல், மீத்தேன் உள்ளிட்ட கனிம வளங்களை சுரண்டும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தமிழகத்தில் தடை விதித்து, தமிழகத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டாவில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச்சூழலில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்கக்கூடாது என கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று 29-ம் தேதி ஒருநாள் பந்த் நடத்தியதை கண்டித்து நேற்றிரவு திருச்சியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லவிருந்த கர்நாடக பதிவெண் கொண்ட பேருந்துகளை சிறை பிடித்து அதன் முன்னர் அமர்ந்து மறியல் போராட்டத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நடத்தினர்.
இந்த மறியல் போராட்டத்தின்போது, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கொடுக்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும், தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தினால் திருச்சி பேருந்து நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக கண்டோன்மெண்ட் போலீசார் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிட வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் கர்நாடகத்திற்கு செல்லவிருந்து பேருந்துகள் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச்சென்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“