காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகா- தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவின் சில அமைப்புகள், எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு மறுபுறம் வலியுறுத்தி வருகிறது.
இதனால் இரு மாநிலங்களிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தது போல் சித்தரித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோவை தற்போது நடந்தது போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 2 பேர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சீமான் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த செல்வின் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் கூறுகையில், "இவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தின் படங்களை தற்போது நடந்தது போல் சித்தரித்து படங்கள் பகிர்ந்திருந்தனர்.
இருவரின் செயல்களும் இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளில் விரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கப்படும்" எனவும் தெரிவித்தனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சீமான், செல்வின் ஆகியோரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“