காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கர்நாடகா- தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனால் இரு மாநிலங்களிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று (செப்.27) வெளியிட்டுள்ளார். அதில் காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழைய வீடியோக்கள், போஸ்டர்களை தற்போது நடந்தது போல் சித்தரித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“