காணாமல் போன சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலன் வழக்கில் விசாரணை சரியான பாதையில் உள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களை தெரிவித்தால் விசாரணை பாதிப்பு எற்படும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்த வீடியோவை சமீபத்தில் முகிலன் வெளியிட்டிருந்தார்.
பின்னர், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் முகிலனை காணவில்லை. இதையடுத்து, முகிலனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் ஆட்கொணர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் சீலிடபட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் சிபிசிஐடி விசாரணை அதிகாரியை அழைத்த நீதிபதிகள் விசாரணை தொடர்பான விபரங்களை கேட்டனர். இதற்கு விசாரணை அதிகாரி விளக்கம் அளித்தார்.
அப்போது முகிலன் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் மூன்று மாதங்களுக்கு மேல் இதுவரை எந்த ஒரு தகவலையும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும், தற்போது கூட சீலிடபட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் விசாரணை சரியான பாதையில் உள்ளதாகவும், விசாரணையில் நல்ல முன்னேற்றம் மட்டும், முக்கிய தகவல் கிடைத்துள்ளது. தற்போதை நிலையில் அது குறித்து வெளியிட்டால் அது விசாரணை பாதிப்பை ஏற்படுத்தும் எனவே விசாரணை அதிகாரிகளுக்கு கூடுதல் கால அளிக்கலாம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கின் விசாரணை மூன்று வார காலத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.