கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த சரவணா சுந்தர் கூறியதாவது, கோவை மாநகர காவல் ஆணையாளராக, இன்று எனக்கு இந்த பணியை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த புதிய பணியில் என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்படுவேன். குற்ற நடவடிக்கைகள் மூலமாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மூலமும், விபத்து வழக்குகள் மரணங்களை தவிர்ப்பதன் மூலமாகவும், அனைத்து காவல் ஆய்வாளர்கள், அவர்களுடைய பணியை மேம்படுத்தி 24 மணி நேரமும் கோவை நகரை இடை விடாது கண்காணிக்க பீட் ஆபிஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
சட்டம் ஒழுங்கு, ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு, கஞ்சா போதை உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவ்வாறு செயல்படும் குற்றவாளிகளை கைது செய்தும் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பழைய ஆணையாளர் அவர்கள் துவங்கி வைத்த அனைத்து திட்டங்களும் திறமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.
இதைதொடர்ந்து கோயம்புத்தூரில் நீங்கள் பார்க்கும் சவால்கள் என்ன என்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கோயம்புத்தூரில் ரவுடிசம், சட்டம் ஒழுங்கு, டிராபிக் இவற்றை நான் முக்கிய சவாலாக பார்க்கிறேன். இன்று தான் நான் பதவியேற்று இருக்கிறேன், சிட்டுவேஷன் என்ன என்பதை பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
செய்தி: பி.ரஹ்மான்