சகாயம் குழு அறிக்கை அடிப்படையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தது உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், கூடுதல் ஆதாரங்களுடன் மனுத் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சகாயம் குழு விசாரித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், கிரானைட் மோசடி மட்டுமல்லாமல், நரபலிகளும் கொடுக்கப்பட்டுள்ளதை சகாயம் குழு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த புகாரில் காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல அரசு துறைகளின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் நேர்மையான விசாரணை தேவை என்றால் சிபிஐ விசாரணை தான் தீர்வு. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு, பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும் கூடுதல் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.