அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து இவர் மீதும், அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பண மோசடி வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, “ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்ற அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்துவதால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதமும் ஏற்படுகிறது. எனவே இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை” எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் ரவீந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. இருப்பினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது 3 பிரிவுகளின் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாககவும் ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கிஷ்லே குமார் சிங் விசாரிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.