சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
தமிழக கோயில்களில் இருந்து மாயமான பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை உருவாக்கியது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அந்தப் பிரிவின் ஐஜியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.
அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச்சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட திருவள்ளூர் டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து, காதர் பாஷா, சுப்புராஜ் ஆகியோர் மீது சிலை கடத்தலுக்கு உதவியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட, அந்த முதல் தகவல் அறிக்கையைப் பயன்படுத்தி கடந்த 2022-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சென்னை பாலவாக்கத்தில் பொன். மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் 8 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. சிலைகள் தொடர்பான அரசு ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக பொன்.மாணிக்கவேலுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து பொன்மாணிக்கவேல் மீது 120பி, 166, 166ஏ, 167, 182, 193, 199, 506, 195ஏ உள்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது அவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொன்.மாணிக்கவேல், பொய் வழக்குப்பதிவு செய்திருப்பது உண்மை என தெரியவந்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பும் ஏற்படும் என்றும் சிபிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சிபிஐ விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவர் அளித்த பேட்டியில், ஓராயிரம் வழக்குகள் என்மேல் உள்ளன. நான் சாகும்வரை என்னை விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். நானே என் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியதாக, தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“