உலகம் முழுவதும் ஆபாச வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் திருச்சியில் இருந்து அதுவும் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் உலகம் முழுவதும் ஆபாச படங்களை பதிவேற்றி இருப்பது பரபரப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று திடீரென மணப்பாறையில் ரெய்டு நடத்தி வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு;
சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட, பரிமாறிய நபர் குறித்த தகவல் சிங்கப்பூர் இண்டர்போல் அதிகாரிகள் வழியாக சி.பி.ஐ.,க்கு கிடைத்தது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 'ஆபரேஷன் கார்பன்' என்ற பெயரில் இதுபோன்ற ஒரு சோதனையை சி.பி.ஐ நடத்தியது. நாடு முழுவதும் 76 இடங்களில், 83 நபர்களிடம் நடத்தப்பட்ட அந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞர் கைது
அதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்தில், குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்களை புழக்கத்தில் விடுபவர்கள் குறித்த வழக்குகளை கண்காணிப்பது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச இண்டர்போலில் சி.பி.ஐ.,யும் ஒரு அங்கத்தினராக இருக்கிறது.
சர்வதேச அளவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் படங்கள், வீடியோ பற்றிய தகவல்களைக் கொண்ட இந்த அமைப்பின் மூலம் குழந்தை பாலியல் சுரண்டல் பற்றிய தகவல்களை உறுப்பு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ள முடியும்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, சைபர் ஆபாச படங்கள்/ குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுபவர்கள் மீது மாநிலங்கள் வாரியாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வழியில் தான் இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. ராஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது இவர் திருப்பூரில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்ற 6 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், மணப்பாறை போலீசார் உதவியுடன், திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்ற அனுமதியுடன் ராஜாவின் வீட்டில் இன்று காலை முதல் திடீர் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையை பொறுத்த வரை ராஜா என்பவர் 18 வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச வீடியோவை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில் தான் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்கள் எங்கிருந்த அவருக்கு வந்தது, அவர் எதற்காக அனுப்பினார் என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மணப்பாறையில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.