Advertisment

பழங்குடி சமூகத்தை சேர்ந்த 7 பேர் மீது பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி இருளர்கள் சட்டவிரோத காவலில் சித்திரவதைச் செய்யப்பட்டு, பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

author-image
WebDesk
New Update
cbi

பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் இன்று (07.04.2023) விடுத்துள்ள  கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது.

Advertisment

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பழங்குடி இருளர்கள் சட்டவிரோத காவலில் சித்திரவதைச் செய்யப்பட்டு, பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

கடந்த 25.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை, ஆறுபுளியமரம் கே.வி.பி. செங்கல் சூளையில் வசிக்கும் பழங்குடி இருளர்கள் செங்கேணி, அப்பு இருவரையும் மீன் பிடிக்க சென்றுவிட்டுத் திரும்பும் போது காட்டேரிக்குப்பம் காவல்நிலைய போலீசார் பிடித்துச் சென்றனர்.  பின்னர் அதே பகுதியில் கே.வி.பி. செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை செய்து வந்த பழங்குடி இருளர்கள் அய்யனார் (எ) அய்யப்பன், பூனை (எ) செங்கேணி, கட்டப்பன் (எ) கன்னியப்பன், சங்கர், செங்கல் சூளை உரிமையாளர் ரமேஷ் ஆகியோரையும் காட்டேரிக்குப்பம் போலீசார் பிடித்துச் சென்றனர்.

மேற்சொன்ன இருளர்களை 25.02.2023 முதல் 28.02.2023 வரை 3 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து காட்டேரிக்குப்பம் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் சரண்யா மற்றும் 6 போலீசார் அடித்துத் துன்புறுத்திக் கடும் சித்திரவதைச் செய்துள்ளனர்.

மேலும், மேற்சொன்ன 7 இருளர்கள் மீதும் திருடியதாக பொய் வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அதில் இருவர் சிறார் என்பதால் நீதிபதி இருவரையும் ரிமாண்ட் செய்யவில்லை. பின்னர் இருவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் கடந்த 07.03.2023 அன்று பிணையில் வெளியே வந்தனர். மற்றவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம், கண்டமங்கலம், புதுச்சேரி மங்கலம், வில்லியனூர் ஆகிய காவல்நிலையங்களில் கண்டுபிடிக்க முடியாத மொத்தம் 9 திருட்டு வழக்குகள் மேற்சொன்ன இருளர்கள் மீது போடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அப்பட்டமான பொய் வழக்குகள் ஆகும்.

இதுகுறித்து 27.02.2023 முதல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி, தமிழக அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கை இல்லை.

இச்சம்பவங்களைக் கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் கடந்த 13.03.2023 அன்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில்  புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், விழுப்புரத்திலும் கடந்த 20.03.2023 அன்று இருளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், புதுச்சேரி அரசு இதுவரையில் குற்றமிழைத்த காட்டேரிக்குப்பம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா மற்றும் 6 போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் பணியிடை நீக்கம்கூட செய்யவில்லை. குற்றமிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கில் அரசும் காவல்துறையும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. போலீசார் செய்த குற்றத்தை அதே துறையைச் சேர்ந்த உயரதிகாரி விசாரித்தால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நியாயம் கிடைக்காது என எண்ணுகிறோம். மேலும், இது இரு மாநில காவல்துறை தொடர்புடைய சம்பவங்கள் என்பதால் சிபிஐ விசாரித்தால் மட்டுமே சரியாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

மேற்சொன்ன 7 இருளர்கள் சித்திரவதைச் செய்யப்பட்டு, பொய் வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி புதுச்சேரி, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கற்பகம் என்பவர் கடந்த 05.04.2023 அன்று புகார் மனு அனுப்பியுள்ளார்.

எனவே, மேற்சொன்ன சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென புதுச்சேரி, தமிழ்நாடு அரசுகளை வலியுறுத்துகிறோம். இல்லையேல், சிபிஐ விசாரணைக் கோரி பாதிக்கப்பட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment