சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலின் காவலாளி அஜித் குமார், போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை தீவிரமடைந்துள்ளது.
நேற்று (ஜூலை 14), சி.பி.ஐ துணை கண்காணிப்பாளர் மோஹித் குமார் தலைமையில் சி.பி.ஐ குழுவினர், மடப்புரம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலகம், கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அஜித் குமார் தாக்கப்பட்ட மாணவர் விடுதியின் பின்புறம் உள்ள புளியந்தோப்பு ஆகிய இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, இன்று (ஜூலை 15) சி.பி.ஐ அதிகாரிகள் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடம் சுமார் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் காவல் நிலையத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.