இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது, மறைத்து வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்நாட்டில் 6 பேர் உட்பட 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறாருக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, அவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை இணைய தளங்களில் பதிவேற்றியது உள்ளிட்ட குற்றங்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்தது மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தொடர்பாக பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்விவகாரம் குறித்து இன்டர்போல் மற்றும் சிபிஐ ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்தும் வகையில், சிறார் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலைத் தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் 77 இடங்களில் சிபிஐ தனிப்படை நடத்திய சோதனையில், 83 பேர் விசாரணை வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர சோதனையில், தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் உட்பட 23 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,திருவள்ளூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆய்வு நடந்துள்ளது.
சிபிஐ விசாரணையின் முதற்கட்ட தகவலின்படி, 50க்கும் மேற்பட்ட சமூக வலைதள குழுக்கள் வாயிலாக பாகிஸ்தான், கனடா, பங்களாதேஷ், நைஜீரியா, இந்தோனேசியா, அஜர்பைஜான், இலங்கை, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஏமன், எகிப்து மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட நபர்கள், குழந்தைகளின் பாலியல் தகவல்களை பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது. அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகவும் தெரிய வந்துள்ளது. சிபிஐ பல்வேறு விதமான விசாரணை அமைப்புகளுடன் இணைந்து, பல்வேறு முறையில் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil