கரூர் துயரம்; காவலர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் சி.பி.ஐ விசாரணை

கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தை ஆய்வு செய்த சி.பி.ஐ அதிகாரிகள்; காவல்துறையினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை

கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தை ஆய்வு செய்த சி.பி.ஐ அதிகாரிகள்; காவல்துறையினர் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை

author-image
WebDesk
New Update
karur cbi enquiry

கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை கரூர் நகர போலீஸார் விசாரித்த நிலையில் உயர்நீதிமன்றம் அக்டோபர் 3 ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டது.

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13 ஆம் தேதி இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து அக்டோபர் 16 ஆம் தேதி கரூர் வந்த சி.ஐ.பி.,யினரிடம் அக்டோபர் 17 ஆம் தேதி எஸ்.ஐ.டி வழக்கு ஆவணங்களை ஒப்படைத்தது.

இதையடுத்து அக்டோபர் 18 ஆம் தேதி சி.பி.ஐ, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.,வினர் பலர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மேலும், சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்ட 3 பேர் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி எஸ்.ஐ.டி அளித்த ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர்.

Advertisment
Advertisements

தொடர்ந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல்பர்ட்டிடம், சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் மனோகரன் அக்டோபர் 22 ஆம் தேதி சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் அடங்கிய சீலிடப்பட்ட உறையை ஒப்படைத்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.பரத்குமார் விடுப்பில் இருந்தார், என்பதால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் அக்டோபர் 25 ஆம் தேதி சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் நகலை கேட்டு த.வெ.க விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு நகல் வழங்கப்பட்டது. பின்னர் கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆவணங்களுடன் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சி.பி.ஐ அதிகாரிகள் முன் ஆஜரரானார். அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 41 பேர் உயிரிழந்த வேலுசாமிபுரம் கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 31 ஆம் தேதி) காலை சுமார் 10.30 மணிக்கு கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தை பார்வையிட்டனர். எஸ்.பி. பிரவீண்குமார், ஏ.எஸ்.பி முகேஷ்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் உடனிருந்தனர். கரூர் டி.எஸ்.பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடைபெற்றது. சி.பி.ஐ விசாரணை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. விசாரணையின்போது ஃபோட்டோ கேமரா, வீடியோ கேமரா, டிரைபேடுகள், சி.டி ஸ்கேனர் கருவி ஆகியவை பயன்படுத்தப்பட்டன. முன்னதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த போட்டோ, வீடியோகிராபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் கரூர் சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ.,யினர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

க.சண்முகவடிவேல்

TVK Cbi Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: