/indian-express-tamil/media/media_files/2025/04/05/MLn0UY8X38xTT1D16Vse.jpg)
தமிழ்நாடு முழுவதும் கனிமவள முறைகேடு தொடர்பாக 15 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 5) சோதனை மேற்கொண்டனர்.
2002-ஆம் ஆண்டில் இருந்து 2013-ஆம் ஆண்டு வரை நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 64 உரிமங்கள் பெற்று வி.வி மினரல்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் கனிம வள மணலை எடுத்து விற்பனை செய்தனர். இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக மணலை எடுத்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனிமவள முறைகேடு தொடர்பாக தமிழ்நாட்டில் 15 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதால், தமிழ்நாடு அரசுக்கு ரூ. 5, 832 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஆய்வறிக்கையில் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 15 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, சென்னை எழும்பூர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் 5 மணி நேரத்திற்கு மேலாக சி.பி.ஐ சோதனை நீடித்தது.
அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வி.வி மினரல்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது. முன்னதாக, முறைகேடான வகையில் மணல் எடுக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது மட்டுமின்றி, இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணை செய்தது. ரூ. 5, 832 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பின்னர், தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்ட வந்தது. குறிப்பாக, சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தான் தற்போது சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக, சென்னையில் உள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 9 மணியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தகவல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.