வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க எம்.பி ஆ. ராசாவை ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி எம்.பி-யுமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 2015-ம் ஆண்டு சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. 7 ஆண்டு விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு சம்பந்தமாக, ஆ. ராசா மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்களுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், குற்றம்சாட்டப்பட்ட காலகட்டத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ.5 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கக் கூடிய சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிபதி சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த குற்றப்பத்திரிகையில், விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க எம்.பி ஆ. ராசா, அவருடைய நண்பர் கிருஷ்ணமூர்த்தி உறவினர் பரமேஷ்குமார் உள்ளிட்டோர் ஜனவரி 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"